×

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விமானப்படை கமாண்டர் அபிநந்தன் பெற்றோரை சந்தித்து கட்சி தலைவர்கள் நேரில் ஆறுதல்

சென்னை: பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விமானப்படை கமாண்டர் அபிநந்தன் பெற்றோரை சந்தித்து கட்சி தலைவர்கள் நேரில் ஆறுதல் தெரிவித்தனர். அதன் பிறகு அவர்கள் அளித்த பேட்டி மற்றும் அறிக்கைகள்.
அமைச்சர் ஜெயக்குமார்: இன்றைக்கு, பெரிய பெருமை என்னவென்றால், நாங்கள்  அபிநந்தன் பெற்றோரை சந்தித்தோம். அவர்களின் நிலையைப் பார்த்து, இப்படி பெற்றோர்களை பெற்றதற்கு, நாம் தவம் செய்திருக்க வேண்டும். அந்தளவிற்கு, மன  தைரியத்துடன் எங்களிடம் பேசியது, மறக்க முடியாதது. அவர்கள், குடும்பம் மூன்று தலைமுறையாக, ராணுவத்தில் இருந்துள்ளனர். அபிநந்தனின் தாத்தா,  சிம்மகுட்டி, இரண்டாவது உலகப்போரில் பணியாற்றி, உயிர் தியாகம் செய்தவர்.

தந்தை வர்தமான், கார்கில் போரில் பணியாற்றியவர். தற்போது, அபிநந்தன்  நாட்டிற்காக, அரும்பெரும் தியாகத்தை செய்து, நாட்டின் பெருமையை,  உலகத்திற்கு உயர்த்தி இருக்கிறார். அவருக்கு, வணக்கத்தை  தெரிவித்துக்கொள்கிறோம். டி.ஆர்.பாலு ( திமுக முதன்மை செயலாளர்): ஒவ்வொரு தமிழனும் பெருமைபடும் அளவிற்கு தமிழகத்தை சேர்ந்த மாவீரன் அபிநந்தன் திகழ்கிறார்.ஜெனிவா ஒப்பந்தப்படி அவர் நடத்தப்படவேண்டும். இந்த கருத்தை எங்கள் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்திருக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவருடைய தந்தை கூறுகின்றபோது அவரிடத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை.

அவர் பத்திரமாக, பாதுகாப்பாக நம் நாட்டிற்கு திரும்பி வருவார் என்கின்ற நம்பிக்கையோடு மட்டுமல்ல நமது நாட்டிற்கும் பாகிஸ்தானுக்கும் ஏதாவது நடந்தாலும் அதில் நம்முடைய நாடுதான் வெற்றிபெறும். நம்முடைய வீரர்கள் தான் வெற்றிபெறுவார்கள் என மிக அழுத்தம் திருத்தமாக அவர் தெரிவித்தது நமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. பிரேமலதா (தேமுதிக பொருளாளர்): இந்திய  நாட்டிற்காக விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தானால்  பிடிபட்டிருக்கிறார் என்ற செய்தி இந்தியாவில் இருக்கின்ற ஒவ்வொருத்தரையும்  தாக்கியுள்ளது. அதை பற்றி பேசாதவர்கள் யாரும் இல்லை. அபிநந்தன்  பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): விமானி  அபிநந்தன் வர்த்தமானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எமது கவலையை  பகிர்ந்து கொள்கிறோம்.
மேலும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், டிடிவி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், காங். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உட்பட பல்வேறு கட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆறுதல் தெரிவித்தனர்.

அபிநந்தனை வரவேற்க  டெல்லி சென்றனர் பெற்றோர்
இந்திய விமானி அபிநந்தன் விடுதலை அறிவிப்பை ஒட்டி மகனை வரவேற்க அவரது பெற்றோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். அபிநந்தனை இன்று பாகிஸ்தான் அரசு வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக செய்தி வெளியானதையடுத்து அபிநந்தனை வரவேற்க அவரது தந்தை வர்தமான், அவரது தாயார் டாக்டர் ஷோபா, சித்தப்பா டாக்டர் பிரசாத் அஜித், அவரது மனைவி உஷா, உறவினர் அசோக் பானு குமார் ஆகியோர் நேற்று இரவு 10:35  மணிக்கு இன்டிகோ விமானம் மூலம் டெல்லி சென்றனர். டெல்லியில் இருந்து வாகா எல்லைக்கு அபிநந்தன் குடும்பத்தினரை விமானப் படை அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர். அங்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைக்கின்றனர். அப்போது அதிகாரிகளுடன் சேர்ந்து மகனை வரவேற்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Communist Party of India ,Abhiyan ,Pakistan Air Force , Pakistan, Air Force Commander, Abhinandan, Party leaders
× RELATED யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை...